ஏன் இந்த பாரபட்சம்?

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வினால் எமது நாட்டிற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க்குற்றச் சாட்டு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் தற்போது உலாவி வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கை இராணுவம் செயற்பட்ட விதம் சர்வ தேச நெறிமுறைகளை மீறிய செயலாகக் காணப்பட்டதாகவே ஐ.நா. வினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படைகளினால் பின்லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டு வலுவற்றதாகக் காணப்படுகிறது. உலக நாடுகள் பலவும் இலங்கை மீதான குற் றச்சாட்டை ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை. இந்த ஒரு மாற்றத்தை கடந்த வாரம் நன்கு உணர முடிந்தது.

சர்வதேசப் பயங்கரவாதி என வர்ணிக்கப்பட்ட பின்லேடனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துக் கொன்றது போலவே மற்றுமொரு பயங்கரவாதியாக வர்ணிக்கப்பட்ட அதுவும் உலக நாடுகள் பலவற்றிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரான பிரபாகரனும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டனர். இதனை இலங்கை இராணுவம் மரபு வழிப் போர்முறையில் மேற்கொண்டது.

ஆனால் உலக நாடுகளையே உலுக்கிய இரு பயங்கரவாதிகளை கொன்று மக்களின் எதிர் கால வாழ்வில் பயமற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இரு நாட்டுத் தலைவர்கள் மீதும் ஐக்கிய நாடுகள் சபை இரு வகையான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது கவலை தரும் விடயமாகும். உண்மையில் அமெரிக்கா அல்கைதா இயக்கத்தின் தலைவரை மட்டுமே அழித்துள்ளது. ஆனால் இலங்கையோ முப்பது வருட காலமாக இருந்து வந்த புலிகள் இயக்கத்தையே வேரோடு அழித்துள்ளது. இதில் இலங்கைக்கே உண் மையான வெற்றி என்று கூறவேண்டும்.

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே புலிகள் இயக்கம் இருந்துள்ளது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனாதி பதி ரணசிங்க பிரேமதாச உட்பட எத்தனையோ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பி னர்கள், எண்ணிலடங்காப் பொதுமக்கள் அதனைவிடவும் சகோதர இயக்கப் படுகொ லைகள் என புலிகள் செய்த கொலைகளின் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது.

இத்தனை கொடிய பயங்கரவாத அமைப்பை ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜன நாயக அரசாங்கம் மக்களின் ஆதரவுடன் அழித்தமையைத் தவறு என்று எவராவது குறிப்பிட்டால் அதனை விடவும் முட்டாள் தனம் எதுவுமாக இருக்க முடியாது. அத னையே இன்று ஐ.நா. நிபுணர் குழு செய்துள்ளது. அப்படியாயின் பயங்கரவாதிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாதா? அவர்களது பயங்கரவாதச் செயல்களை ரசித் துக் கொண்டு மக்களை அவர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்க வேண்டுமா?

இறுதிப் போரில் பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டது உண்மையாகவே இருந்தாலும் கூட அது புலிகளால் கேடயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை அவர்களே சுட் டுக் கொன்றதாக சாட்சிகள் கூறுகின்றன. போர் இடம்பெற்ற சம்பவத்திலிருந்த முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம், அப்பகுதியில் கடமையாற்றிய வைத்தி யர்கள், அரச அதிகாரிகள், தப்பி வந்த பொதுமக்கள் எனப் பலரும் புலிகளே பொது மக்கள் சிலர் மரணமாவதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேரில் இருந்த சாட்சிகள். இந்தச் சாட்சிகளை விடுத்து சோடிக்கப் பட்ட வீடியோ ஒளி நாடாக்களை வைத்துக் கொண்டு ஐ.நா. தனது உறுப்புரிமை பெற்ற ஒரு ஜனநாயக நாட்டின் மீது அப்பட்டமான குற்றச்சாட்டைச் சுமத்துவது ஏற் றுக்கொள்ள முடியாத ஒன்று. இது எவரதோ வற்புறுத்தலின் பேரில் அல்லது சிலர் குறிப்பிடுவது போன்று பாரிய பணப் பரிமாற்றத்தின் விளைவாகச் சோடிக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகவே கொள்ள முடியும்.

அமெரிக்கா பின்லேடனைக் கொன்றது சரி என்றால் இலங்கை பிரபாகரனைக் கொன்றது சரியே. அமெரிக்காவிற்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயம் வழங்க உலக நாடுகள் இடமளிக்கக் கூடாது. புலிகளை அழித்தமைக்கு இலங்கை மீது விசாரணை என்றால் பின்லேடனை அழித்தமைக்காக அமெரிக்கா மீதும் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அதுதான் ஐ.நா. வின் நேர்மையான பக்கச் சார்பற்ற செயற்பாட்டை உறுதிப்படுத்தும் இல்லையேல் எதிர்காலத்தில் ஐ.நா. வின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லாது போகும்.

thinakaran.lk